பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3
பூந்தோட்ட காதல்காரா!!
(காதல் இளவரசி) விஷ்ணு ப்ரியா

காதல்காரா-1
அது சென்னையின் அனைத்து விதமான மாந்தர்களும் தத்தம் தேவைகளுக்காக வந்து போகும்.. பிரபலமான மால்!!
அம்மாலின் உயர் மாடிக் கட்டடத்திற்குள், அமையப்பெற்றிருந்த பல்பொருள் அங்காடியொன்றில் தான் நின்றிருந்தாள் அவள்.
நம் கதையின் நாயகி!! பூஜா.
அவளைப் பார்த்த கணமே.. அவளது ஆடையை வைத்து, அவளை ‘அல்ட்ரா மாடர்ன் யுவதிகள்’ என்று வரையறுத்து விட முடியாவிட்டாலும், ‘மாடர்ன் யுவதி’ என்னும் வட்டத்தில் சேர்க்கக்கூடியதாக அமைந்திருந்தது, அவளது ஆடைப்பூணல்கள் யாவும்.
ஆம், கையில்லாத.. ஸ்லீவ்லெஸ் டீஷேர்ட் ஒன்றையும், தன் பிருட்டங்களின் அழகுக் கோலத்தை அப்படியே எடுத்துக்காட்டும்.. இறுக்கிப் பிடித்த டெனிமொன்றையும் அணிந்து.. தளர் கூந்தலோடு அங்காடியில் நின்றிருந்தாள் பூஜா.
வெண்ணெயில் குழைத்துக் குழைத்துச் செய்தாற் போல, தேகம் வாய்க்கப் பெற்றிருந்த.. பூஜா.. கண்ணையும், கருத்தையும் கவரும் அழகியே!!
அவளது உச்சாதி பாதம் வரை.. வெயிலில் வாடி வதங்காமல்.. ‘ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல’.. அத்தனைப் புத்துணர்ச்சியுடன் இருக்கும் எஞ்ஞான்றும்.
அதுவே, சான்று, அவள் மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவள் என்பதற்கு!!
அவளது ஒரு கை.. தான் இதுகாறும் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த டிராலியைப் பிடித்திருக்க.. மறுகையோ.. காதில் வைத்திருந்த செல்லைப் பற்றியிருந்தது.
செல்லிற்குள்.. தலைவி பூஜாவின்.. தோழியொருத்தியின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.
தோழியோடு.. சன்னமான குரலில் அளவளாவிக் கொண்டே.. பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ராக்கைகளில் தனக்குத் தேவையானவற்றை விழிகளால் ஏறிட்டுக் கொண்டிருந்தாள் பூஜா.

அவள் காதிற்கும், தன் தோளுக்கும் இடையில்.. செல்லை விழுந்து விடாத வண்ணம்.. தலையைச் சரித்துப் பிடித்தவளாக.. கைகள் நீட்டி.. குழந்தைகளுக்கான பேம்பர்ஸ் பாக்கெட்டை எடுக்கவும் விழைந்தாள்.
இன்னும் மணமாகாத கன்னிப்பெண் பூஜாவும்.. குழந்தைகளுக்கான பேம்பர்ஸ் வாங்க காரணமும் யாதோ??
இதோ இதோ.. செல்லில் உரையாடிக் கொண்டிருப்பவளே அதைக் கூறவும் முனைந்தாள்.
“உன் குழந்தைக்கு.. எஸ் சைஸ் பேம்ப்பர்ஸ் தானே?? ஆ.. ஆ.. தெரியும்.. எடுத்துட்டேன் மணி!!” என்று தன் தோழிகளுள் ஒருத்தியான மணிமலரிடம் கூறிக் கொண்டே.. பேம்ப்பர்ஸ் பாக்கெட்டை எடுத்து.. டிராலியில் இட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
புதிதாகத் தாயாக பரிமாணம் கொண்ட தோழி, ‘மணிமலரி’ன்.. இளம் சிசுவுக்காகத் தான் இந்தப் பொருட்களின் கொடுக்கல், வாங்கலும் கூட!!
இப்படி சாவதானமாக.. பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவளின் வாழ்க்கையிலும் அந்நொடி முதற்கொண்டு இராகு காலமும் ஆரம்பமானதோ??
அப்படி எண்ணும் வண்ணம் தான்.. பத்தும் பலதும்.. நடக்கச் சித்தமானது ஆங்கே. அதுவும் தன்னைத் தானே சுதாரித்து அவள் மீண்டெழுவதற்கு முன் நிகழ்ந்தது.
அவளது ஹிருதயமும் வந்து அடைத்துத் துடிக்கத் துவங்கியது தொண்டைக்குழிக்குள்.
அங்ஙனம் என்ன தான் நிகழ்ந்தது??
மயிரடர்ந்த கறுப்பு முரட்டுக் கரமொன்று, அவளின்.. முன்னங்கையைப் பட்டென்று.. வெகுவெகுமான இறுக்கத்துடன்.. ‘கையே கழன்று வந்து விடுமோ?’ என்ற ஐயுறும் வகையில் பிடித்து இழுத்திருந்தது.
முரட்டுக்கரம் தன்னை இழுத்த இழுவிசைத் தாங்கொணாது.. அதன் விசைக்கேற்ப இழுபட்டுப் போனவளின் காதிலிருந்த செல்லும் கூட.. அடுத்த விநாடி.. நிலத்தில் வீழ்ந்திருந்தது.
செல்லும், வெண்ணிற டைல்ஸ் தரையில் அழுத்தமாக மோத.. செல்லின் டிஸ்ப்ளே கண்ணாடி கூட பெயர்ந்து.. சில்லு சில்லாகிப் போனது.
‘தன்னைச்சூழ என்ன நடப்பதுவும் என்ன? தன்னை இழுப்பதுவும் யார்? ஏன்? எதற்கு?’ என்று பூஜாவுக்குள் பற்பல கேள்விகள் உதித்து ஓடினாலும்.. அதற்கு பதில் அறியும் வழிவகை தான் தெரியவில்லை, பூம்பாவைக்கும்.
அம் முரட்டுக் கரம்.. அவளை அத்தோடு விடாது.. அவளது வெண்சங்குக் கழுத்தோடு அதிவன்மையாகக் கையிட்டு.. மிருகத்தனமாக அழுத்தி இறுக்கியிருந்தது!!
கிட்டத்தட்ட அவள் கழுத்தை நெரித்து.. அவளைக் கொன்று விடுவது போலிருந்தது அந்தக் கறுப்புக்கரம் உபயோகித்த அழுத்தமும்; அதன் மனம் சுமந்து வந்த வக்கிரமும்!!
அவளைப் பின்னாடியிருந்து இறுக்கிப் பிடித்த கயவன் யாரென்று.. கன்னியவளால் காண முடியவில்லை. இருப்பினும்.. அவனது கறுப்புக்கரத்தில்.. பளபளவென்று பளிச்சிடும் கூர்மையான கத்தியொன்றும் அடைக்கலமாகியிருதை மட்டும் அவளால் நன்கே அவதானிக்க முடிந்தது.
அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரன், கத்தியின் கூர்முனை விளிம்பை அவள் கழுத்தில் வைத்து அழுத்திக் கொண்டிருக்கலானான்.

கத்தியும்.. கயவனின் ஈவிரக்கமற்ற மனம் போல.. சிறிதும் தயவுதாட்சண்யம் பாராது, ‘இக்கணமோ..? அக்கணமோ??’ அவளது கழுத்தின் சருமத்தை…. கீறிவிடக் கூடும் என்ற அபாயமும் எழுந்தது.
பூஜாவோ..”ம்க்ம்”என்ற சன்னமான ஒலியுடன்.. தொண்டைக்குழி ஏறியிறங்க.. எச்சில் கூட்டி மிடறு விழுங்கிக் கொள்ளவும் செய்தாள். மெல்ல தன் கருமணிகளை மாத்திரம் உருட்டி.. குனிந்து.. அந்தக் கரத்தினை ஏறிடலானாள்.
‘ இத்தாந்தண்டியாக இருந்த கை’யையும், அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் கத்தியைப் பார்த்ததுமே.. ‘இன்று தன் வாணாளில் இறுதி நொடிகளும் இவை தானோ?’ என்ற எண்ணம் தான் மிகைத்தது பூஜாவுக்குள்.
அந்த படபடப்பான எண்ணங்களே.. பூங்காரிகைக்குள் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் நல்கலானது.
பெண்ணுயிரை பணயம் வைத்து.. தன்னுயிரைக் காக்க நினைக்கும் திருடன் அவன்!!
அவன்.. ஒரு பெரும்,’ நடமாடும் மாமிசப் பர்வதம்’ என்று.. தன்னைப் பின்னிருந்து பிடித்திருப்பவனின் தோற்றத்தை.. முழுதாகப் பாராமலேயே கச்சிதமாக ஊகித்துக் கொண்டாள் அவள்.
அவளது நுரையீரல் ஒரு கணம் வேலைநிறுத்தம் செய்தது; மூச்சுவரத்து என்பது அவளில் சுத்தமாக அற்றுப் போனது;அவளது கருமை அஞ்சனம் தீட்டப்பெற்ற விழிகளும் திகைப்பில் விரிந்தது!!
அந்த மாமிசப் பர்வதமோ.. பெண்ணவளைக் கத்திமுனையில் நிறுத்தியபடி.. தன்னைப் பிடிப்பதற்காக நெருங்கி வந்த செக்யூரிட்டிகளை.. பரபரப்போடு பார்த்து நின்றான்.
ஆம்,மாமிசப் பர்வதம்.. அந்த மாலில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபரொருவரிடமிருந்து பிக்பாக்கெட் அடித்திருந்த மகா திருடன்!!
பிக்பாக்கெட் அடிக்கப்பெற்ற நபரும்.. அவனைக் கையும், களவுமாக பிடித்தவராக, “திருடன்.. திருடன்ன்ன்!!” என்று கத்தியது மாத்திரம் தான் தாமதம். மாலில் ஆங்காங்கே நியமிக்கப்பட்டிருந்த காவல் ஊழியர்களும் கூடினர் அத் திருடனைப் பிடிப்பதற்காக.
அந் நபரைப் பிடிக்க அவர்களும் நீலநிற சீருடையில் ஓடோடி சம்பவ இடத்திற்கு விரைந்து வர.. இன்னும் அதிகமாக பதற்றம் கொண்டான் கயவன்.
க்ஷணமும் யோசியாமல்.. தன்னைப் பிடித்து வைத்திருந்த நபரின் நெஞ்சு மத்தியில் இரு கைவைத்துத் தள்ளிவிட்ட திருடனும்.. படபடவென்று விரைந்து இறங்கி வந்தான் மாலின் கீழ்த்தளத்திற்கு.
காவலாளிகளிடம் அகப்பட்டதும், “கைமா தான்” என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தேயிருந்தது கள்வனுக்கும். ஆகையால்,
அவ்விடத்திலிருந்து தன்னுயிரைக் காத்துக் கொள்ள.. ஓடியவன் புகுந்து கொண்டான்.. கீழ்த்தளத்திலிருந்த பல்லங்காடியினுள்.
அங்கேயும்.. காவலாளிகளும் பின்தொடர்ந்து வரவே.. வேறுவழியின்றி.. தன்னுயிரைத் தற்காத்துக் கொள்ள.. திருடனின் விழிகளும் சுற்றுமுற்றும் தேடியது, ஒரு பணயக் கைதியை.
துழாவி விழிகளுக்கு.. தொக்காக பூஜாவும் கைக்கெட்டிய தூரத்தில் விழவே.. ஒரு சிறிதும் நேரம் கடத்தாமல்…. நம் நாயகி பூஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து.. பணயக் கைதியாகவும் ஆக்கிக் கொண்டான் அவன்!!
அத் திருடனின் பருத்த தொப்பை.. பூஜாவின் இடுப்பில் வந்து இடித்துக் கொண்டிருந்தது. அவளது காதுக்கு அருகினில் அவன் மொழிந்த மொழிகள் யாவும்.. அவளுக்கு மட்டுமே கேட்கக் கூடிய விதத்திலேயே வெளிவந்தது.
“அசையாத.. அசைஞ்ச.. கீழ்ச்சிருவேன்.. ஒழுங்கு மரியாதையா.. கம்முன்னு கெட.. இன்னா புரீதா?” என்ற அவனது குரலும் தான், இடியோசை போல அத்தனை நாராசமாகத் தான் அவளது செவிகளையும் தீண்டிப் போனது.
இவளோ.. “அம் இம்” என்று ஒற்றைவார்த்தை வராமல்.. கப்சிப்பென்றாகிப் போய் நின்றிருக்க.. அவனை நோக்கி.. செக்யூரிட்டிக்களும் ஓரடி எடுத்து வைத்து வர முயன்றனர்.
காவல் ஊழியர்களுக்கு.. திருடனை விடவும், திருடன் கையில் அகப்பட்டிருக்கும் மாதுவின் உயிரும் முக்கியமாகிப் போனது.ஆதலால்,உடனேயே கள்வனை நெருங்காமல்..எட்ட நின்றபடியே எச்சரிக்கையும் விடுக்கலாயினர்.
அவர்களுள் தலைமை காவல் ஊழியன் போலிருந்தவனோ, “இங்க பாரு..மரியாதையா அந்தப் பொண்ண விட்டட்டு.. சரன்டர் ஆகிரு.. அது தான் உனக்கு நல்லது.. எப்படியும் இங்க இருந்து நீ தப்பிக்க முடியாது.. இங்கேயிருக்க சிசிடிவி பூட்டேஜஸ்ல உன் முகம் தெளிவா பதிவாகியிருக்கும்.. அதுவே உன்னை நீ எங்கேயிருந்தாலும் காட்டி கொடுத்துரும்.. மரியாதையா.. சரணடைந்துடு” என்று பேச்சுவார்த்தை நடத்தியவண்ணமே.. ஈரெட்டு பூனை போல எடுத்து வைத்திருப்பான் காவல் ஊழியனும்.
காவல் ஊழியன் தன்னை நோக்கி.. பையப் பைய எடுத்து வைத்த முதல் அடியிலேயே.. எச்சரிக்கையடைந்த திருடனும்.. மூவெட்டுக்கள் பின்னடைந்து போனான். கூடவே, தலைவி பூஜாவையும் பின்னிழுத்தவனும்.. தன் பணயப் பெண்ணான அவள் மீது வைத்திருந்த கத்தியின் அழுத்தத்தையும் கூட்டத் தவறவேயில்லை .
கயவனோ.. தன் தடித் தாண்டவராயன் குரலில், பட்டப்பகலில் அதுவும் மானுடர்கள் செறிந்திருக்கும் இடம்தனில்.. பட்டவர்த்தனமாக மிரட்டிக் கொண்டிருந்தான்.
” பி.. பின்னாடி போங்க..ம்ம்.. சொல்லிட்டு இருக்கேன்ல?? எ.. எல்லாரும் பி.. பின்னாடி போங்கஅஅஅ.. கி.. கிட்ட வந்தா அறுத்து.. ர்ருவேன்!!”
அவனது உயிர்ப்பயத்துடனான ஊளையிடல்.. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அவ்விடத்தையும் கூட, ‘குண்டூசி முனை விழுந்தாலும் துல்லியமாகக் கேட்கும்’ என்னும் அளவுக்கு நிசப்தமாக்கியது.
கயவன் கையிலோ கத்தி!!
கத்தியின் பிடியில் ஓர் உயிர்!!
அதுவும், எப்பேர்ப்பட்டவரின் மனமும் இரங்கக் கூடிய பெண் உயிர்!!
ஆயினும், அக்கயவனின் மனம் தான் இரங்கவேயில்லை.
கூடி நின்றவர்களும்.. மூச்சடைத்து.. உடல் விதிர்விதிர்த்து நிற்க.. யாரும் அத் திருடனின் அருகினில் முன்னேறவும் தயங்கினர். அவனைப் பிடிப்பதற்காக விரைந்து வந்த மாலின் காவலாளிகளும் கூட.. அவனது மிரட்டலுக்கு அஞ்சி.. ஈரெட்டுப் பின்வாங்கியே நின்று கொள்ளவும் செய்தனர்.
இவளும்.. மூச்சுக்குத் தவித்தவளாக.. ‘சுக்கானுக்கு இழுபடும் நாவாய் போல’.. கயவன் இழுத்த திசையெங்கனும் திருப்பப்பட்டுக் கொண்டே கள்வனோடு விரையலானாள்.
அந்தோ பரிதாபம்!! அவனைத் தாண்டி அவளைக் காப்பாற்ற.. நெஞ்சுரம் கொண்ட ஆண்மகனும் அக்கூட்டத்திலும் இல்லவேயில்லையோ? ‘கடல்லயே இல்லையாம்’ தருணமோ?
கள்வனும்.. அவளது வெண்சங்குக் கழுத்தில் கத்தியை வைத்து நசுக்கிய வண்ணம்.. திரும்பிய போது.. மாமிசப் பர்வதத்தின் விழிகளும் கண்டு கொண்டது, கூட்டத்தை விட்டும் தனித்துத் தெரிந்த ஆஜானுபாகுவான ஆண்மகன் ஒருவனை!!
முழுக்கூட்டமும்.. கள்வன் நெருங்க அஞ்சிப் பின்வாங்க.. ‘அங்கு நிகழ்ந்தேறுபவற்றுக்கும், தனக்கும் ஒரு சிறிதும் சம்பந்தமில்லை’ என்பது போல..தன் பக்கத்திலே.. பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ராக்கையிலே.. நாய்களுக்கான உணவான ‘பெடிக்ரீ’ பாக்கெட்டை எடுத்து.. அதன் காலாவதி தேதியை.. விழிகளாலேயே ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன்!!
அவன்!! இப்புதினத்தின் பேராண்மையாளனான நாயகன்!! .
அவன்?? வீர ராகவன்.
அவ்விடத்தில் இத்தனை களேபரம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்க.. ஒரு சிறிதும் அவன் கண்களில்.. ஏனோ திகைப்பு மிளிரவில்லை. அதிலும் அச்சம்?? அச்சம் என்பது துளியும் இல்லவேயில்லை. இன்னும் ஏன்?.. தீயவனிடம்.. அப்பெண் படும்பாட்டினைக் கண்டு.. அணுவும் சலனம் கூட இல்லை!!
தன்னுடைய டிராலியில் ‘பெடிக்ரீ’ பாக்கெட்டை எடுத்துப் போட்டுக் கொண்ட நாயகனோ.. அங்கு வந்த வேலையை மாத்திரம் மட்டும் பார்க்க நாடினானோ?
‘பெடிக்ரீ’ பாக்கெட்டை எடுத்து.. தன்னுடைய டிராலியில் போட்டுக் கொண்டவன்.. டிராலியின் தள்ளும் விளிம்புப் பிடியில் கைவைத்தவனாக.. தன் பாட்டுக்கு நடக்கவும் தயாரானான்.
கையில் கத்தியிருக்க.. சுற்றி நின்றவர்களும் கயவனை அணுகாமல் எட்ட நின்றிருக்க.. ராகவன் ஒருவன் மாத்திரம் ..விழிகளில் எந்தவிதமான சஞ்சலமும் தன்னை அணுகி வருவதைக் கண்டு.. மாமிசப் பர்வதத்தின் தடுமாற்றமும் அதிகமானது.
கொடியவன் கையிலிருந்த கத்தியும்..ராகவன் எடுத்து வைத்த அழுத்தமான எட்டினைக் கண்டு.. நடுக்குறத் தொடங்கியது.வீர ராகவனைப் பார்த்து.. பிதற்றத் தொடங்கினான் கள்வன்!!

“கி.. கிட்டவராத.. அறுத்துருவேன்.” என்று அழுத்தித் திருடனும் சொல்ல.. ராகவன் முகத்தில் அப்போதும் கூட.. அச்சத்திற்கான இரேகைகள் இல்லவேயில்லை.
மாறாக.. தன் கால்போன போக்கில்.. அவன் டிராலியைம் தள்ளிக் கொண்டு ஓரடி முன்னே எடுத்து வைக்க.. அதற்குத் தடையாக மீண்டும் கேட்டது மாமிச மலையின் குரல்!!
” ஏ.. ஏய்.. உ.. உன்கிட்ட தான் சொல்லிட்டிருக்கேன்.. காதுல விழல..? கிட்ட வராத.. வ.. வ்வ்வ.. வந்தா.. அறுத்துருவேன்!!” என்று அவளின் கழுத்தில் ஆயுதத்தை அழுத்திச் சொல்ல.. சாமானியன் அவ்விடத்தில் இருந்தால்.. பதிலும் வேறுமாதிரியானதாக, பரபரப்புடனோ.. அச்சத்துடனோ தான் ஒலித்திருக்கக்கூடும்!!
ராகவனின் கூற்றோ அஞ்சா நெஞ்சினனாக வெளிவரச் சித்தமானது. அவனது டிராலியின் தள்ளலும் அங்ஙனமே தடைப்பட்டு நின்றது!!
மறுகணம்.. இடுப்பில் ஒரு கையும்.. காதில் ஒரு கையும் வைத்து குடைந்தவாறே.. அலட்சியத்திலும் அலட்சியமாக குரூரனைக் கண்ணுற்றான் ராகவன்.
ராகவன்.. கிஞ்சித்தும் துணுக்கம் கொள்ளாமல்.. திருடனைப் பார்த்து.. அத்தனை அநாயசமாக அப்பதிலை உரைத்திருந்தான்.
“அறுத்துக்க.. யாருன்ன வேணாம்னு சொன்னது? உன்கிட்டேயிருந்து அவள காப்பாத்த.. நான் ஏன் ரிஸ்க் எடுக்கணும்?? அவ என்ன என் அத்தைப் பொண்ணா.. மாமா பொண்ணா??.. ஷீ இஸ் ஜஸ்ட் அ ஸ்ட்ரேஞ்சர் டு மீ.. ம்ம் கோ அஹேட்!!” என்று.. குரலில் அழுத்தம் திருத்தமாக மொழிந்திருந்தான் ராகவன்.
நாயகனின் விட்டேற்றித்தனமான மொழிகளைக் கேட்டு.. கயவனும், ‘இவன் என்னா ‘மேக்’டா?’ என்றாற் போல விழிகள் விரித்து நின்றான்.
கயவனிடம் பணயப் பெண்ணாக சிக்குண்டிருந்த பூஜாவோ..
‘சுற்றி நின்றவர்கள்.. அவளுக்காக என்னாகுமோ? ஏதாகுமோ? மனம் பதறி நிற்க.. அறுத்துக்கொள் என்னும் ஓர் ஆணா?? இவன் மனுஷன் தானா?ச்சே!!’ என்று அருவெறுத்தவளுக்கு.. தலைவன் மீது.. முளைத்தது, உள்ளூற.. கோபம் மலையளவு.

அவள் விழிகள்.. அந்தப் புதுமையாளனைத் தான், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்னும் நொடியிலும்.. குறுகுறுவென்று ஆராயலானது.
அடர்நீல வண்ணத்தில்.. தன் ஆஜானுபாகுவான தேகத்தின் வரிவடிவம் அழகுறத் தெரியும் வண்ணம்.. முழுநீளக்கை ‘ஸ்லிம்ஃபிட் ஷர்ட்’ அணிந்திருந்தான் அந்நெடியவன்.
கூடவே, இந்தக் கால இளசுகள் போல.. பெல்ட் அற்று பேன்ட் அணிந்திருக்க.. உச்சாதி பாதம் வரை அவனது நேர்த்தி.. அவனை அழகனாகவே காட்டிக் கொண்டிருந்தது.
அலைஅலையான கற்றைச் சிகை; பரந்த நெற்றியும், விழிகளின் தீட்சண்யமும்.. கூர்நாசியும்.. அழுந்த மூடியிருந்த செவ்வாயும்.. அவன் நிச்சயம்.. அதிகம் பேசாதவன் என்று கட்டியம் கூறிக் கொண்டிருந்தது.
அழகிய முகத்தால் ஆய பயன் என்ன?? மானுடம் போற்றும் அகமும் வேண்டும் அல்லவா??
அவனது மனிதாபிமானற்ற செயலையும், பேச்சையும் கேட்டு.. சட்டென முளைத்த காளான் போல.. பெண் மனத்தினுள் புது ஆடவன் மீதான.. கெட்ட எண்ணமும் வளர்ந்தது.
வீர ராகவனோ.. எதற்கும் கவலைப்படாமல் டிராலியைத் தள்ளிக் கொண்டு அவளைக் கடந்து செல்லத் துணிய,குண்டனும் பயந்து தடுமாறி.. இரண்டெட்டு பின்னகர நின்றிருந்தான்.
குண்டனோடு வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டுக் கொண்டு போனாள் அப்பாவிப் பெண்ணான பூஜாவுக்கும்.
வீர ராகவனோ.. பரிதாப நிலையின் வசம் ஆட்பட்டிருந்த அப்பெண்ணை ஒரு சிறிதும் மீட்டெடுக்க நாடாமல்.. அவ்விருவரையும் தாண்டி நகர்ந்து செல்லானான்.
அவன் கிட்டத்தட்ட.. அந்தக் கயவனைக் கடந்து வந்திருந்த நொடிப் பொழுது அது!!
என்ன நிகழும் என்று கணித்திராத விகார தீவிர நிமிஷங்களும் அதுவே!!
சட்டென்று.. தன் இடக்கைப்புறம் நின்றிருந்த .. அக் குண்டனின் அருகில் வந்தவனோ, அடுத்து, மின்னல் மின்னி மறையும் கண நொடியில்.. தன் டிராலியினுள் இருந்த ‘பெடிக்ரீ’ பாக்கட்டை.. இடது ஒற்றைக்கையால் குண்டனை நோக்கி.. ஓங்கி வீசி அடித்திருந்தான் ராகவன்!!
பெடிக்ரீ பாக்கெட், ‘தன்மீது வந்து விழும்’ என்று க்ஷணமும் எதிர்பார்த்திராத கயவனின் கத்தியும்.. நாயகன் ஓங்கி அடித்த விசையின் வீரியத்தில் தடுமாறி வீழ்ந்திருந்தது தரையில்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது எத்தனை உண்மை??
இத்தனைக்கும் அவனிடம்.. கயவனைப் போல கத்தி இல்லை. கூரிய ஆயுதங்களும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சுட்டுவீழ்த்தும் தோட்டாக்களும் இல்லை. துப்பாக்கியும் இல்லை!!
அவனிடம் இருந்தது பெடிக்ரீ பாக்கெட் மாத்திரம் தான்!!
மறுநொடி.. பூஜாவின் சுயாதீனமான வலக்கரம் பற்றி.. சட்டென்று இழுத்திருந்தான் ராகவன், தன்னை நோக்கி!! இவளும் தன்னையும் மீறி சுயக்கட்டுப்பாட்டை இழந்து பம்பரம் போல சுழன்று வந்து.. அவனது கையணைப்புக்குள் பாந்தமாக அடங்கிப் போனாள்.
வஞ்சியவள் தன் நெஞ்சில் அடைக்கலமானதும், அடுத்த விநாடி.. தன் வலிமையான பாதத்தினை உயர்த்தி.. அந்தக் கயவனின் நெஞ்சுக்கே ஓங்கி ஓர் மிதி மிதித்திருந்தான் ராகவன்!!
அவன் தன் முழங்கால் வளையாமல்.. நேர்மானமான நீட்டி உதைத்த தினுசில்.. அதன் வீரியம் தாங்கொணாது.. காற்றில் தள்ளப்பட்டுக் கொண்டு போய்.. எட்ட விழுந்தான் திருடன்.
இவை யாவும்.. கண் சிமிட்டி நிமிர்ந்து நேர்ப்பார்வைப் பார்க்கும் கணத்தில் நிகழ்ந்து முடிந்திருக்கலானது. பூஜாவோ.. ஈவிரக்கம் காட்டாத அப்புது ஆடவனாலேயே.. அவள் காப்பாற்றப்பட்டதையும் கூட உணர முடியாத ஒரு இன்ப அதிர்ச்சியின் வசம் ஆட்பட்டு.. திகைத்துப் போய் நின்றிருக்கலானாள்.
இப்போது, அவள் விழிகளின் எதிரே என்ன நடந்தது?
கயவனின் கத்தியில் சிறைவைக்கப்பட்டிருந்தவள், எங்ஙனம்.. இப்புதியவனின் மார்பில் வந்து தஞ்சமானாள்?? இமைக்கும் நேரத்துள் இதுவும் சாத்தியமானது எவ்வாறு?? பற்பல கேள்விகள் மீதூற.. அப்புதியவனையே அண்ணார்ந்து சூரியனை நோக்கும் சூரியகாந்தி மலரைப் போலப் பார்த்தாள் பூஜா!!
பூஜாவின் அருகாமையில்.. நிர்ச்சலனமாய் அவன் முகம்!!
மீசை சூழ் அதரங்களோடு.. தீட்சண்யம் சிந்தும் விழிகளோடு அவன் முகம்!!
அவனுக்கே அவனுக்கென்று சொந்தமான “ஃபோக்” பாடி ஸ்ப்ரேயுடன் இணைந்த அவனது பிரத்தியேக மணமும் இணைந்து அவள் நாசியை நிரடிப் போய்க் கொண்டிருந்தது.
அவனது வாசனை அவளது ஆடையின் மீது.. என்றென்றும் நீங்காத வண்ணம் பதிந்து போனது. இருப்பினும், பூஜாவுக்கோ, ஆரம்பத்திலேயே தன்னைக் காக்காமல்.. மிரள விட்ட ஆடவனின் மீது சிறு வன்மமும், கோபமும் ஒருங்கே முளைக்கவும் செய்தது.

அவளது கையொன்று அவனது திண்ணென்ற ஒரு பக்க மாரினை, அவளையும் அறியாமல் ஸ்பரிசித்திருந்தது. அதன் விளைவாக, புஜங்கள் ஏறித்தாழ அவன் வாங்கும் மூச்சும் சரி, இலேசாக அதிர்ந்து அடங்கும் இதய துடிப்பையும் சரி.. அவள் அவனது அருகில் இருந்தமையினால் கேட்கவும் முடிந்தது.
ராகவனும், அவளது பயத்தை அறிந்தாற் போல.. அவளையே இமையாமல், பார்வை பார்த்து வைக்க.. அப் பார்வையில் இவளது சுவாசத்தின் சத்தம் அவனாலும் உணர முடியுமானதாக இருந்தது.
அங்கு நிகழ்ந்தேறியவற்றில்.. அவளது முழு உடலும் உலுக்கப்பெற்று.. கைகால்கள் உதற. . அதிர்ச்சியிலிருந்து வெளிவர மாட்டாமல்.. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வரும் போலிருந்தது.
சொற்ப நொடிகளில்.. கயவனால் அவள் உயிர் அல்லவா போயிருக்கும்??
அச்சிந்தனை எழுங்கால் எல்லாம், பயத்தோடு கோபம் தோன்றியது பூஜாவுக்கு.
அதன் பிரதிவிளைவாக, பட்டென்று வாய் திறந்து.. ‘ஏன்.. என்னை முன்னாடியே காப்பாத்துறதுக்கு என்ன..?எதுக்கு இந்த உடான்ஸ்.. டயலாக்லாம்?? பெரிய ஹீரோன்னு நினைப்பா?’ என்று வண்டை வண்டையாகத் திட்ட நாவு நுனிவரை வந்தது வார்த்தைகள்.
காரிகையின் சீற்றம் உகுக்கும் மொழிகள் யாவும்.. அவளுக்குள்ளேயே ஜீவசமாதியாகிப் போகும் வண்ணம்.. சிந்தனையைக் கலைத்துக் கேட்டது?? சுற்றி நின்றிருந்தார்களின் கைத்தட்டல் ஒலி!!
ஓரிளம் வாலிபன்.. அத்தனை பேர்.. அச்சத்தில் உறைந்து நின்ற பொழுது தனில், இளம் காரிகையை.. ‘துணிவுடன் எதிர்த்துக் காத்தான்’ என்பதைக் கண்கூடாகக் கண்டார்கள் அல்லவா அவர்களும் ??
ஆக அவனது வீரதீர சாகசச் செயல் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்துப் போய் கைத்தட்ட.. அதில் தான் சிந்தை தெளிந்து வெளியில் வந்தாள் பூஜா.
நாயகன் பாதத்தால் உதை வாங்கி.. வலியில் துடித்திருந்த கயவனை.. செக்யூரிட்டிகள்.. பின்னாடி கையை வளைத்துப் பிடித்து.. இறுக்கிக் கொள்ள.. தக்க சமயத்தில் வந்த காவற்றுறையினரும்.. கைது செய்தனர் பிக்பாக்கெட் திருடனை.
மறுகணம்.. வீர ராகவனை.. மின்குமிழை மொய்க்கும் விட்டில் பூச்சிகளாக.. இளம்பெண்களும் வளைத்து மொய்த்துக் கொள்ளலாயினர்.
அவனை உரசியும் உரசாலும் நெருக்கியடித்து நின்று கொண்ட பெண்டிர்களோ, ஆளாளுக்கு, அவனது செயலை, அழகை வார்த்தைகளாக அப்பட்டமாக ஆராதிக்கவும் செய்தனர்.
“வாவ்.. யூ ஆர் சோ ஹேன்ட்சம்..”
“உங்க தைரியம் இங்கே யாருக்கு மேன் வரும்?”
“யூ ஆர் ஸ்மார்ட் அன்ட் ஹேன்ட்சம்!!”
“இந்த மாதிரி.. ஆக்ஷன் காட்சியை இன்னிக்கு தான்.. லைவ்வா பார்க்கறேன்.. பொண்ணுங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார்.. பிடிக்கலேன்னா தான் ஆச்சரியமே!! ” என்ற புகழ்ச்சி மழையில் நனைந்ததும்.. இதே இடத்தில் இன்னபிற ஆடவனாக இருப்பின், சபல புத்தியின் பெண்களைத் தீண்ட முயன்றிருக்கலாம்!!
ஆனால், வீர ராகவனோ.. கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது, உம் என்றே நின்றிருந்தான்.
இது நம் கதாநாயகன் ராகவன்!! உள்ளத்தில் உதித்தோடும் உணர்வுகளை எதிராளி படிக்க முடியாதவண்ணம்.. அகத்திலேயே மறைக்கும் சாமர்த்தியன், ராகவன்!!
கூடி நின்ற பெண்களுள் ஒருத்தியோ.. அந்தரத்தில் தன் செல்லை உயர்த்தி நின்று, ” ஒன் செல்ஃபீ சார்!!” என்று வீர ராகவனின் அனுமதியின்றியே பற்பல சுயமிகளையும் எடுத்துக் கொள்ள.. கோபிகையர்கள் சூழ் மதுசூதனனும் ஆகிப் போனான் ராகவன்.
அக்கணமும் கூட.. அவன் விழிகள் உணர்ச்சிகள் மரித்துப் போனது போல.. சலனமற்றிருக்க.. ராகவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த பூஜாவின் வதனமும் தான் செஞ்சீற்றம் உகுத்தது.
‘கோபிகையர்கள் சூழ்ந்தாலும் ரோபோ போல இவனொருவனால் மாத்திரமே நிற்க முடியும்!’ என்று எண்ணிக் கொண்டாள் பூஜா.
பூஜாவோ.. பாவம் யாரும் குசலம் விசாரிக்காத வண்ணம்.. கவனிப்பாரற்றுத் தனித்து விடப்பட்டாள்.
அக்குறையை நிவர்த்தி செய்யவென.. அங்குமிங்கும் அலைந்து திரியும் கூட்டத்திற்கு மத்தியில் வளைந்து நெளிந்து.. பதற்றத்தோடு…. நாயகியை அணுகி, ஓடோடி வந்திருந்தாள்
தோழி துவாரகா.
தோழி துவாரகாவும், நம் நாயகி பூஜாவும் இணைந்து தான் இன்று பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்திருந்ததே!! இருப்பினும், சில உள்ளாடைகள் வாங்கவென துவாரகா.. மேல்தளம் விரைந்திருக்க.. கீழ்தளத்திலேயே நின்று கொண்டாள் பூஜா.
தோழி துவாரகா தனக்கான உள்ளாடைகளை வாங்கிக் கொண்டு மீண்டும், தலைவி பூஜாவை வந்து சேர்வதற்குள்.. பெரிய அல்லோலகல்லோலமே நிகழ்ந்திருப்பது அறிந்து.. துவாரகாவுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றித் தான் போனது.
பூஜாவை அடைந்த.. தோழியின் மேனியும் சன்னமாகத் துணுக்குற்றுக் கொண்டிருந்தது. மறுவிநாடி, சட்டென்று நாயகியை தாவி அணைத்திருந்தாள் துவாரகா.
“பூ.. பூஜா.. ஆர் யூ ஆல்ரைட்..??” என்று அணைப்பிலிருந்து விலகிய துவாரகாவும், தன் உள்ளங்கையில்.. பூஜாவின் நாடியையும் ஏந்தி நின்றாள்.
“ஹேய் பூஜா.. இங்கே இவ்வளவு களேபரம் நடந்துச்சே.. இதுல ஒண்ணுக்கூடவா உங்க டாடி காதுக்கு எட்டாம போகும்.. கண்டிப்பா உங்க டாடிக்கு தெரிய வரத்தான் போகுது?? .. அப்போ உங்க டாடி கேட்டா என்ன பதில் சொல்றது.. அத நினைச்சா தான் பயந்து பயந்து வருதுடீ” என்று கைகளை உதறிக் கொண்டு சொன்னாள் தோழி.

தன் வாழ்வின் கனமான நொடிகளைக் கடந்து வந்திருப்பினும், தோழி. பதற்றம் கொள்வது கண்டு.. சகியாமல்.. நிலைமையைச் சகஜமாக்கவே முயன்றாள் அவள்.
“நீ சும்மா டென்ஷன் ஆகறத நிறுத்து துவா.. என்னைத் தான் பார்க்கறேல்ல.. ஏதும் ஆகலல?? நான் நல்லா தானே இருக்கேன்.. சோ சில்!! ..விடு..டாடி கேட்டா.. நான் பேசிக்கறேன்” என்று சமாளித்தபடி.. அங்கிருந்தும் அகல முனைந்தாள் பூஜா.
அவள் அங்கிருக்கும் வரை.. அவளொருத்தி அங்கு நின்றிருப்பதையே கண்டு கொள்ளாதது போலிருந்த ராகவனின் விழிகளும், அவள் புறமுதுகிட்டுத் திரும்பியதும் தான்.. தான் காப்பாற்றிய பெண்ணை முதன்முதலாக ஏறிட்டுப் பார்த்தது.
அவளது பின்னழகின் வளைவு நெளிவை எடுத்துக் காட்டும் டெனிமில்.. ஆடி அடங்க.. நகரும் பெண்ணவளை.. ஒரு சில கணங்கள் இமைக்காமல் வெறித்துப் பார்த்திருந்தான் ராகவன்.
அக்கணம்.. மாலை விட்டு வெளியேறத் துணிந்த அவளும் அறியவில்லை.அவளையே பார்த்திருந்த அவனும் அறியவில்லை!!
அன்று நடந்த.. அச்சம்பவம் தன் வாழ்விலும், அவள் வாழ்விலும் திருப்புமுனையாக அமையப் போகிறது என்பதனை. தங்களுக்குள் ஒரு நெருக்கத்தை உருவாக்கப் போகிறது என்பதனை!!
காதல்காரா-2

இரவு வானில் தன் நட்சத்திர சேடியர்களோடு.. நிலா இளவரசியும், உலா வந்து கொண்டிருக்கும் அந்தகாரப் பொழுது அது!!
அது சாதாரண மத்தியதர வர்க்க மானுடர்களும் குடியிருக்கும்.. பத்துப் பதினைந்து மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம்!!
அதில்.. ஏழாவது தளத்திலுள்ள.. வீடொன்றினுள் தான் தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்து நின்றிருந்தான் நம் நாயகன் வீர ராகவன்!!
இரண்டு படுக்கையறைகளும், ஒரு நடுக்கூடமும் கொண்டு.. சமையலறை மற்றும் குளியலறை சகிதம் அமைந்திருக்கும் சின்ன ப்ளாட் தான் அவனுடையது!!
இருப்பினும், ‘உறவுகள்’ என்று இருந்தும்.. தன்னந்தனியனாக வாசம் செய்பவனுக்கு.. அந்த சின்ன இடமும் கூட.. விசாலமானதாக.. தாராளமானதாகவே தோன்றலானது.
இன்னும் ஏன்??அது, பெரும் அரவங்கள் ஏதும் அற்ற.. சற்றே நிசப்தமான.. அவனது இதயக்கு உகந்த இடமும் கூட!!
அவனது இல்லம் எங்கனும் அந்தகாரம் கவிழ்ந்த பொழுதிலும், இன்னும் அவன் தன் வீட்டின் மின்விளக்குகளையும் கூட ஒளிர விட்டிருக்கவில்லை.
அவனது படுக்கையறையின் கண்ணாடிச்சாளரத்தின் வழியாக ஊடுருவி ஈயப்பட்டுக் கொண்டிருந்தது சந்திரவொளி. அவ்வொளியில், அவனது அறையும்.. சன்னமான ஒளியிலும், கோரமான அந்தகாரத்திலும்.. சங்கமித்திருந்தது.
தற்சமயம் தான் குளித்து முடித்து விட்டு..இடையில் வெண்ணிற பூத்துவாலையைக் கட்டிக் கொண்டு.. குளியலறையை விட்டும் வெளியில் வந்திருந்தான் ஏகாந்தவாதி வீர ராகவன்!!
குளியலறைக்கதவை அவன்.. அறைக்குள் நுழையும் அவசரத்தில் சரியாக மூடாத காரணத்தினாலோ என்னவோ?
குளியலறை மின்விளக்கின் ஒளி, அறைக்குள் உட்புகுந்திருந்தது.
மெல்ல ஈரம் சொட்டச் சொட்ட.. அழுத்தமான வெற்றுப்பாதங்கள் எடுத்து வைத்து வந்தவன்.. டிராயர் மீதிருந்த.. மூங்கிலினாலான கூடையை நாடித் தான் போனான்.

அதற்குள் என்ன இருந்ததுவோ?? நாயகன், வீர ராகவனின் விழிகளில் முதன்முறையாக ஊறியது கருணை!! மனமெல்லாம் தாய்மையின் இரேகை!!
அந்தக் கூடைக்குள்.. சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது சின்ன நாய்க்குட்டியொன்று!!
அந் நாய்க்குட்டியும் அவனைக் கண்டதும்.. சின்னக்குரலில் ஒலியெழுப்பி, “வள் வள் வள்” என்று கத்திக் கத்தி வாலாட்டிய வண்ணமே.. அவனது வெறும் மார்பின் மீதுதாவி ஏறவும் செய்தது.
அது படாரென்று தாவி ஏறவும்.. அதற்கு வலிக்காத வண்ணம் மென்மையாக ஏந்திக் கொண்டான் ராகவன்.
அது, தன் மூக்கினை உரசி உரசி.. அவனது பிரத்தியேக சுகந்ததை மோப்பம் பிடிக்கவும் எத்தனித்தது போலும்.அதன் செய்கையில், அத்திப் பூத்தாற் போல,பேரதிசயமாக, ராகவனின் முகத்தில் அரும்பியது புன்னகை!!
“ஹேய்.. என்னடா உனக்கு?? பார்த்ததும் தாவி ஏறிட்ட?? டூ யூ லைக் மீ? ஐ லைக் யூ டு படீ..!! “என்று அதன் காதினைத் தடவி விட்டவன்.. அதனை ஏந்திக் கொண்டே அறையின் ஈசான மூலையை நோக்கி நடந்தான்.
அம்மூலையில்..நிராதரவாகக் கிடந்தது வெற்று உணவுத்தட்டொன்று. அந்த உணவுத் தட்டில்..வாங்கி வந்த டிராயர் மீதிருந்த.. நாயுணவான, ‘பெடிக்ரீ’ யையும் போட்டுக் கொடுக்கலானான்.
தான் விரும்பிப் புசிக்கும் உணவு, பாத்திரத்தில் கொட்டப்படுவது கண்டதும்.. அவனிடமிருந்து தாவிக்குதித்து இறங்கிக் கொண்டது அதுவும்!!
நாய்க்குட்டியும்..தட்டை நாடி வந்து, ‘லபக் லபக்’ என்று உணவைச் சாப்பிடத் தொடங்கியது.
கையில் ராகவன் ஏந்தி நின்றிருந்த ‘பெடிக்ரீ’ பாக்கெட்டைக் கண்ணுற்றதும்.. அவன் மனக்கண் முன் மின்னல் வெட்டி அடங்கினாற் போன்று தோன்றி மறைந்தது.. இன்று மதியம் அவன் காத்த..அப்பெண்ணின் வதனம்!!
அவளையும் அறியாமல்.. மிடறு கூட்டி விழுங்கிக் கொண்டு, அவனை நோக்கி.. விழி சமிக்ஞையினாலேயே, “என்னைக் காப்பாத்து” என்றவளின் மருண்ட மான்விழிகள்.. இக்கணமும் வந்து நின்றது;இம்சித்தது.
பட்டென்று ஒரு நிமிடம் தோளை உலுக்கி விட்டவனாக.. அவள் நினைவில் நின்றும் சுயம் தெளிந்தான் ராகவன்.
தனிமையில் உழலுபவனோ, தனக்கு உற்ற உறுதுணையாக, தோழனாக நாய்க்குட்டி வளர்க்க ஆரம்பித்திருந்தான் தற்போது தான்.
அவனது மனத்தினை களவு கொண்டது அழகு கோல்டன் ரிட்ரீவர் நாய்க்குட்டி.
அது சாப்பிடும் அழகை இரசித்தவண்ணமே.. அதன் அருகில் ஒரு காலை குத்திட்டும், மறுகாலை முழந்தாளிட்டும் தரையில் அமர்ந்தான் இவன்.
“ஹேய் பப்பி..மிச்சம் வைக்காம சாப்ட்ரு என்ன? குட்பாய்!! ” என்று அதன் தலையை தட்டிக் கொடுக்கவும் செய்தான் அவன்.
அதனோடு பேச்சுவார்த்தை நடத்திய வண்ணமே.. எழுந்து, அலமாரியை நாடிப் போய் சட்டையும் புனையலானான்.
அவன் தனிமையில் இருந்தாலும் கூட வேலைவெட்டி இல்லாதவனோ.. இன்றேல் உறவுகள் இல்லாதவனோ அல்லன்!!
அவன் பாரதத்தின் ஆகாயப்படையில்.. கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்தவன்!!
பின்னர், சதாவும் ஆகாயத்தையே உலா வந்து கொண்டிருந்தவனுக்கு.. தரையில் பாதங்கள் பதித்து.. நடைபயிலவும் ஆசை வந்தது போலும்!!
பாரதத்தின் விமானப்படையில் நின்றும் விலகி, சென்னையில்.. வந்து குடிபுகுந்திருந்தான் ராகவன்.
தற்சமயம் உடற்றகைமைக்கு ஏற்ற வேலையையும் தேடிக் கொண்டிருக்கிறான்!! நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என்பது அவன் நம்பிக்கை.
பின்னே உறவுகள்?? உறவுகள் என்று சொல்லிக் கொள்ள தாயிருந்தும்.. ஏனோ.. ஈன்றாளுடன் ஒட்டாத பிள்ளையாகிப் போனான் ராகவன்.
பத்து வயதில்.. புற்றுநோயினால் தந்தையை இறந்து போகவே.. தன் ஒரே உறவான தாயும் மறுமணம் செய்து கொண்டது ஒரு சிறிதும் உவப்பை நல்கவில்லை.
தாயின் இரண்டாவது கணவனோடும்.. அவர்களுக்குப் பிறந்த மகன்..அதாவது இவனது தம்பியோடும் ஏனோ ஒட்ட மறுத்தது மனம்!!
பத்து வயது என்பது உலகம் புரிந்தும்.. சீராகப் புரிந்திராத வயதல்லவா??
அன்புத் தந்தைக்கு நிகரான ஸ்தானமதில்.. இன்னொரு ஆடவனை நிறுத்தி வைத்துப் பார்க்க முடியவில்லை ராகவனால்.
ஆகையால், அவர்களில் நின்றும் ஒதுங்கியே இருந்தவன் கல்லூரியில் பயிலும் காலம்தொட்டே.. ஜிம், பழு தூக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டு, உடற்தகுதியையும், பலத்தையும் கூட்டிக் கொண்டான்.
இளமானிப் பட்டம் கையில் வந்தவுடன்..தன் இருபத்தோராவது வயதில்.. விமானப் படை பரீட்சைக்கு விண்ணப்பித்து எழுதியவன்.. விடாமுயற்சியின் பலனாய்.. விமானப்படையில் தேர்வுமானான்.
அதன் பின்.. எட்டு ஆண்டுகள்.. முழுமையாக எட்டு ஆண்டுகள் தன் சேவையை.. இளமையை.. வாலிபத்தை.. பாரத மாதாவின் பாதங்களுக்கு சமர்ப்பித்தவன் அதில் வெற்றியும் கண்டான்.
தொடர்ந்தேச்சையாக அப்பணியில் இருந்தவனுக்குள்..போகப் போக மனோஅழுத்தமும், வெறுமையும் சூழ்ந்து கொள்ளலானது.
ஆகையால், மாற்றத்திற்காக.. பதவியைத் துறந்து.. தென்னகத்தின் சென்னை மாநகரத்துக்கு வந்து குடியேறியவனுக்கு.. சென்னை செந்தமிழும் புத்துயிர்ப்பளித்தது.
தன் வாழ்க்கையின் ஆதி, அந்தத்தைப் பற்றி எண்ணியவாறே.. சட்டையின் கடைசி பட்டனை ராகவன் போட்டுக் கொண்டிருந்த கணம்.. அவன் செவிகளில் விழுந்தது சிறு அரவம்!!
சட்டை பட்டனைப் போட்டுக் கொண்டிருந்தவனின் கையும், மேற்கொண்டு நகராமல் ஸ்தம்பித்து நின்றது. அவ் அரவத்தை செவிமடுத்தாற் போல,, அவனது காதுநுனியும் மெல்ல ஏறி இறங்கியது.
அதைத் தொடர்ந்து.. திடும்மென்று.. சமையலறையில் நின்றும் கேட்டது பாத்திரம் உருட்டப்படும் சப்தம்!!
வீரராகவனின் விழிகள் இன்னும் கூர்மையானது.
அவன் மட்டுமே வாசம் செய்யும் வீட்டில்.. இன்னொரு அரவம் கேட்பது.. அவனுக்கு அத்தனை ஆசுவாசத்தைக் கொடுக்கவில்லை. யாரோ அந்நியர்கள் உட்புகுந்திருப்பது மாத்திரம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது!!
யாராக இருக்க முடியும்? கொலைகாரர்களா?? திருடர்களா? இன்றேல் இன்று மதியம் பிடித்துக் கொடுத்தானே திருடன்.. அவனின் கூட்டாளிகள் யாருமா? பழிவாங்கத் தான் வந்துள்ளனரா??
அடுத்த கணம்.. ராகவனின் தேகத்தில்.. ஆபத்து நேரத்தில் விறைக்கும் வீரனின் உள்ளுணர்வுகளும் விழித்துக் கொள்ள.. அவன் கைகளும் இழுத்தது அலமாரியின் டிராயரை!!

அதிலிருந்த அவனது பாதுகாப்புக்கென அவன் வைத்திருக்கும் லைசன்ஸ் வாங்கப்பெற்ற துப்பாக்கியை எடுத்தவன்.. அதனை அரவம் எழாத வண்ணம்.. மெல்ல இழுத்து லோட் செய்தவனாக நகர்ந்தான் .
அவன் பாதங்கள் அழுத்தமானதாக அதே சமயம் நிசப்தமின்றித் தரையில் பதிந்தது. அவன் விழிகள் நாற்புறமும் சுழல.. கூர்மையும் அதிகமானது. அவன் சமையலறை நோக்கி நெருங்க நெருங்க.. உருட்டும் சப்தமும் கூட அதிகரித்துக் கொண்டே போனது.
நடுக்கூடத்தையும், சமையலறையையும் பிரிக்கும் ஒற்றைச் சுவரில்.. முதுகு சாய்த்து.. முகத்துக்கு நேரெதிரே ஏந்திய துப்பாக்கியுடன் நின்று கொண்டவன்.. ஒரு கணம் தன் தோள்புஜங்கள் ஏறியிறங்க மூச்சுவிட்டு நின்றான்.
“த்ரீ.. டூ.. ஓன்!!” என்று எண்ணியபடியே.. அவன் துப்பாக்கியை அந்த ஆசாமிக்கு எதிராக நீட்டியவண்ணம்..திரும்பி சமையலறைக்குள் நுழைந்திருந்தான்.
அங்கே.. ஒரு கையில்.. தோசைக் கரண்டியும், மறுகையில்.. பிய்த்துக் கடித்த முழு தோசையுடனும்.. எதேர்ச்சையாகத் திரும்பியவனாக நாயகனது, துப்பாக்கி நீட்டப்பட்ட மெய்ந்நிலைகண்டு விக்கித்து நின்றிருந்தான் ஓர் ஆடவன்!!
காவல்துறை சீருடையில்.. நின்றிருந்தான் அவ் ஆடவன்.
அது, வீர ராகவனது ஆஸ்தான தோழன் கிஷோர்!!
துப்பாக்கி தன்னைக் குறிவைத்திருப்பது கண்டு.. கிஷோரின் வாயிலிருந்த ஒரு பாதித் தோசையும் கூட.. தொப்பென்று விழுந்தது தரையில்.
பின்பு.. அச்சத்தில் வெலவெலத்துப் போனவனாக வாய் திறந்த கிஷோரோ, “டேய் மச்சான்.. நான் ஒண்ணும் டெரரிஸ்ட்டோ.. தேச துரோகியோ இல்லைடா.. ஜஸ்ட் சா.. தாரண.. சிட்டிசன் தான்.. சுட்ராதடா!!” என்று சிற்பமாய் சமைந்தவனாக மொழிந்திருந்தான் கிஷோர்.
கிஷோரைக் கண்டதும் தான்.. தோள்புஜங்கள் சமரச நிலையை அடையலானது ராகவனுக்கு.
‘ஹப்பாடா’ என்று மூச்சு விட்டவனாக பழைய நிலையை அடைந்தவனாக, ராகவனும்.. மெல்ல தன் துப்பாக்கியை கீழிறக்கவும் செய்தான்.
சொல்லாமல், கொள்ளாமல் திருடன் போல உள்நுழைந்திருக்கும் போலீஸ் நண்பனைக் கண்டு.. மூக்குக்கும் மேலே சீற்றம் பொங்கவே.. தாறுமாறாகக் கத்தத் தொடங்கினான், தலைவன்.
” தீனிப் பண்டாரம்.. தீனிப்பண்டாரம் அறிவில்ல.. இப்படி தான்.. உன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு சொல்லாம கொள்ளாம வருவீயா..? சுட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்??” என்று சீற்றக்குரலில் உறுமியிருந்தான் ராகவன்.
சட்டெனத் தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொண்ட நண்பன் கிஷோரோ.. மீண்டும் ஸ்டவ்வின் பக்கம் திரும்பியவனாக, தோசைக்கல்லில்.. மாவை இட்டு.. தோசை வார்க்கலானான்.
” சுட்டிருந்தா இந்நேரத்துக்கு சாப்பிட்டிருக்கலாம். நான் தோசைய சொன்னேன்!!” என்று விட்டேற்றித்தனமாக உரைத்திருந்தான் கிஷோர்.
கிஷோரின் பதிலில் இன்னும் கொஞ்சம் காண்டானவனாக, புறமுதுகை வெறித்துப் பார்த்தவனாக.. மார்புக்கு குறுக்காக கையிட்டு நின்றிருந்தான் ராகவன்.
தன் தாய்க்கும், தாய் வழி உறவுகளுக்கும் ராகவன் கொடுத்திராத அந்தஸ்தை.. உரிமையை.. அவன் உவந்து கொடுத்திருக்கும் ஒரே நபர்? அது, நண்பன் கிஷோர்!!
ராகவனின் ப்ளாட் சாவி வேறு கிஷோரிடம் இருக்க.. ராகவனின் வீட்டுக்குள்.. உரிமையோடு.. சாவி கொண்டு திறந்து உள்நுழைவதா கிஷோருக்கும் கடினம்??
தன்னிடமுள்ள பிரத்தியேக சாவியை உபயோகித்துத் தான் உள்ளே வந்திருந்தான் நண்பன்.

ராகவனோ.. சீற்றம் மாறாமல், நேரே சென்று குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து.. அதில் நின்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்து.. தொண்டையில் மளமளவென சரித்துக் கொண்டவனாக வாய் திறந்தான்.
“ஒரு கப் மாவு தான் இருந்துச்சி. அதுவும் போச்சா. ஏன்டா.. வாசற்படியா.. காலிங்க் பெல் அழுத்திட்டு வர மாட்ட???”

ராகவனின் மொழிகள் தன் காதுக்குக் கேட்டும் கேட்காதவன் போல தோசையை ஊற்றிக் கொண்டே பதில் சொன்னான், தோழன்.
“நீ வீட்ல இல்லேன்னு நினைச்சேன்.. அதான் என்கிட்ட இருக்கற கீய வைச்சு உள்ள வந்தேன்.. அதப்பெரிய குத்தமா பேசிக்கிட்டு!!” என்றபடியே திரும்பிய கிஷோரோ.. நாயகன் தண்ணீர் அருந்தி நிற்பதைக் கண்டு விழிகள் இடுங்க நின்றான்.
” ஆமா.. ப்ரிட்ஜ்ல.. இந்த பீரு, வோட்கா.. ஜின்னு.. ரம்முன்னு வைக்கற பழக்கமெல்லாம் இல்லீயாடா?? ஒன்லி வாட்டர் தானா? வந்ததும் தாகமா இருக்கேன்னு தேடினா.. ஒண்ணுத்தையும் காணோம்.. நீ ஏர்போர்ஸ்ல இருந்தவன் தான?? மது ஒழிப்பு இயக்கத்துல இருக்கலையே.. சந்தேகமா இருக்கு..!!” என்று நண்பன் கேட்கலானான்.
சிறிது கூட சிரித்து வைக்காமல்.. நண்பனின் காலை வாரலானான் ராகவன்.
” ஓசி குடிக்கு யாராவது வந்துருவாங்கன்னு தான்.. நான் எதுவும் வைச்சிக்கறதில்ல..!! “என்று சொல்ல.. நண்பன் கிஷோரும்.. தன்னை, ‘ஓசி குடி’ என்ற நாயகனை.. ஜர்க்கானவனாக ஒரு சில கணங்கள் பார்த்தான்.
சட்டென்று தோழனின் தோள்மீது கையிட்ட ராகவனோ.. “கோச்சுக்காத மச்சி.. சரி வா சாப்பிடலாம்!! “என்று அருகிருந்த சாப்பாட்டு மேசையில் தோசையையும், பொடியையும் தட்டில் போட்டு வைத்துக் கொடுத்தான்.
பாரபட்சம் பாராமல்.. தோசையை விழுங்கிக் கொண்டே போன கிஷோருக்கு..பாசமுள்ள நண்பனாக தோசை வார்த்துக் கொடுக்கும் தொழிலைக் கையில் எடுத்தான் நாயகன்.
கிஷோரோ, “ஆமா.. இன்னிக்கு மால்ல என்ன நடந்துச்சு?? ஃபைட்டிங்?? ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷ்ன் ப்ளாக்கா??” என்று கேட்டிருந்தான் அவன்.
பட்டம்பகலில் மாலுக்குள் நடந்தது எப்படி நண்பன் அறிந்தான்??
ஒருவேளை யாரேனும்.. வீடியோ எடுத்து.. யூ டியூபில் பதிவேற்றம் செய்தனரோ?? என்று பற்பல யோசனைகள் ஓடியது ராகவனுக்கு.
தான் சுட்ட தோசையை எடுத்து வந்து.. கிஷோரின் காலித்தட்டில் போட்டு விட்டு நிமிர்ந்தவனோ.. “ஏன்டா.. என்னைப் பத்தி தகவல் தேடுறது தான் உன் வேலையா..??” என்று கேட்டிருந்தான்.
கிஷோரோ.. அந்த வட்டாரத்தில் காவற்றுறை அதிகாரியாக இருக்க, இந்தத் தகவல் வந்து சேராமல் இருந்தால் தானே ஆச்சரியம்??
தோசையை விண்டு சாப்பிட்ட கிஷோரோ, “போலீஸ் ஆபிசர்னா.. பலதும் காதுக்கு வந்து சேரும்..!! “என்றபடி.. கடைசி வாயையும் போட்டு விட்டு.. எச்சில் கையோடு எழுந்து சென்று.. சிங்க்கில் கையைக் கழுவியவனாக தலைவனைப் பார்த்தான்.
“நீ காப்பாத்தினது யார தெரியுமா?? சிவப்பிரகாசம் க்ரூப் ஆப் கம்பனீஸ் சிஇஓவுடைய ஒரே பொண்ணு.. பல்லாயிரம் கோடிக்கு ஒரே வாரிசு!!” என்று சொல்ல.. அவனது இடது ஒற்றைப்புருவமும் அசைந்ததா என்று ஐயுறும் வகையில் சற்றே உயர்ந்தது அவ்வளவே!!
இதே இடத்தில் பிறராக இருப்பின்,” என்ன நான் காப்பாத்தினது மல்ட்டி பில்லியனர் மகளா?? “என்று ஆச்சரிய அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றிருக்கவும் கூடும்!!
ஆயினும் இதுதான் வீர ராகவன்!! தன் உள்ளத்து உணர்ச்சிகளை மடைதிறந்த வெள்ளம் போலக் கொட்டத் தெரியாத.. நிர்ச்சலனமுகம் கொண்ட ராகவன்!!
கிஷோரோ தொடர்ந்து வாய் திறந்தான்.
” எது எப்டியோ கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு.. நீ ஜாப் தேடிட்டிருக்கேல்ல?? உனக்கொரு ஜாப் வந்திருக்கு.. நாளை காலையில.. கரெக்ட்டா ஒன்பது மணிக்கு.. சிவப்பிரகசாம் சார போய் பாரு..” என்றவனாக.. சர்வியட்டில்.. கைத்துடைத்துக் கொண்டான் கிஷோர்.
நாயகனின் அமைதி கண்டு.. பக்கென்றானவனாக,” உனக்கு சிவப்பிரகாசம் சார தெரியும்ல? “என்று சந்தேகத்துடன் கேட்க.. உறுதியாக வந்தது வீர ராகவனின் குரல்!!
” தெரியும்”
“அப்ப சரி.. நாளை காலையில.. ப்ளேன் ஷர்ட் போட்டுக்க.. கோர்ட்,சூட் அன்ட் டை போட்டுக் கிட்டா மச் பெட்டர்.. ஃபார்மலா ரெடியாகியிரு.. நான் கரெக்ட்டா எய்ட் தர்ட்டிக்கு வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்..!!” என்று சொன்னவன்.. தன் காக்கித் தொப்பியை மாட்டிக் கொண்டு கிளம்பலானான்..இரவு நேர ரவுன்ட்ஸிற்கு.
காதல்காரா-3

அடுத்த நாள் காலை ஒன்பது மணி!!
நண்பன் கிஷோர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டது போல.. சிவப்பிரகசாம் க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸின் உரிமையாளரின் வீட்டில்.. விருந்தினர்களுக்கான பிரத்தியேக வரவேற்பறையில் தான் அமர வைக்கப்பட்டிருந்தான் வீர ராகவன் மற்றும் உள்ளூர் எஸ் ஐ கிஷோரும்!!
ஜம்மென்று இருந்த.. அமர்ந்தால் அரையடி புதைந்த சொகுசு சோபாவில் வீர ராகவன் அமர்ந்திருக்க, அவன் பக்கத்தில்.. காக்கிச் சீருடையில்.. கையில் லத்தி சகிதம் அமர்ந்திருந்தான் கிஷோர்.
வீட்டின் முகப்புத்தோற்றமே.. பெரும் அரண்மனை போல.. பிரம்மாண்டமான தோட்டமும், வீட்டின் முன் ஒரு பெரிய நீரூற்று மற்றும் அதை சுற்றி ஏக்கர் நிலமும் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.
இங்கே வரவேற்பறையில் தரை கூட.. சதுரங்கப் பலகையைப் போல கறுப்பு, வெள்ளை டைல்ஸினால் ஆக்கப்பட்டிருக்க.. அறையின் தூண்களின் கலைநயம் கூட.. அத்தனை நுட்பமாக செதுக்கப்பட்டிருந்தது.
வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் பணம் வாரியிறைக்கப்பட்டிருப்பது புரிய… வீர ராகவனின் விழிகளோ.. அவற்றையெல்லாம் உணர்ச்சி துடைக்கப்பட்ட அசுவாரஸ்யம் மூண்ட விழிகளுடன் பார்த்திருக்க.. நண்பன் கிஷோரின் விழிகளிலோ.. ஒரு பளிச்சிடல்!!
அக்கணம்.. கறுப்பு கோர்ட் சூட் அணிந்து… சற்றே முன்தள்ளிய தொப்பையுடன்.. கொஞ்சம் உடல் பருத்த வாகுடைய ஒரு ஐம்பது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்கவர் ஒருவர்.. மாடிப்படியிறங்கி வருவது புரிந்தது.
அவர் பின்னால் நான்கைந்து இளம் ஆடவர்கள்.. லேப்டாப்பையும், டேப்பையும், கோப்புக்களையும் தூக்கிக் கொண்டு அவர் பின்னாலேயே.. அவரோடு அளவளாவிக் கொண்டு வருவதும்.. கிஷோரின் கண்களில் விழுந்தது.
எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் கையினைத் தட்டி கிஷோர் உரச.. அதில் தான் சிந்தை தெளிந்தவனாக.. கிஷோர் கண்காட்டிய திசை நோக்கிப் பார்க்கலானான் தலைவன்.
கிஷோரோ ராகவனின் காதுக்குள் கிசுகிசுப்பாக, “இவர் தான் மிஸ்டர். சிவப்பிரகாசம்.. நிமிஷத்துக்கு ஆயிரம் கோடு நெட்வர்த்.. நம்மள நோக்கி தான் வர்றாரு.. மரியாதைக்காச்சும்.. எழுந்து நில்லு” என்று இதழ்களை முழுதாகத் திறவாமல் அவன் முணுமுணுத்து முடிக்கவும், தனவந்தர் சிவப்பிரகாசம் அவர்களை வந்து சேரவும் சரியாகவிருந்தது.
விறுவிறுவென நடந்து வந்தவரின் கண்கள்.. அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கும் வாலிபன் மீது விழ.. அங்ஙனமே நடைத் தடைப்பட்டு நின்ற பிரகாசமும்.. விழிகள் இடுங்கியவராக.. நம் நாயகன் ராகவனைப் பார்க்கலானார்.
கிஷோர் சொன்னதை எந்தவித ஈகோவுமில்லாமல் ஏற்றவனோ.. தன் முழு உயரத்துக்குமாக சோபாவிலிருந்து எழுந்து நின்றவன், “ஹலோ சார்.. ஐ ஆம் எக்ஸ் கமான்டோ வீர ராகவன்!!” என்று அத்தனை ஆளுமையாக தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளவும் செய்தார்.
எந்தவிதமான தாழ்வுமனப்பான்மையும் அற்று, தன்னம்பிக்கையுடன் ராகவன் எழுந்துநின்ற விதமும், அணுகி நின்ற விதமும், அறிமுகப்படுத்திய முறையும்.. முதல் பார்வையிலேயே ராகவனின் மீது நல்லெண்ணத்தை உண்டு பண்ணத் தவறவில்லை அவருக்கு.

அவரோ.. ஆயிரம் பேரை நாளொன்றுக்கு சந்திப்பவராயிற்றே? ஆகையால், ராகவனை அடையாளம் காணத் தெரியாது.. “யூ..?” என்று இழுத்து நிற்க.. சட்டென இடையிட்டுக் கேட்டது கிஷோரின் குரல்.
“சார் இது என் ப்ரெண்டு.. நீங்க கூட உங்க டாட்டரை நேத்து.. அந்த பிக்பாக்கெட் திருடன்ட்ட இருந்து காப்பாத்தினவரை நேர்ல பார்க்கணும்னீங்களே.. அது என் ப்ரெண்டு தான் சார்!!” என்று கிஷோர் எடுத்துரைத்ததும் தான்.. சட்டென்று அவரது ஞாபக அடுக்குகளில் நின்றும்.. தன் சீமந்தப் புத்திரியைக் காத்த ஆண்தகையான் இவன் என்ற ஞாபகமே வந்து போனது.
தன் நெற்றியை சொறிந்தவராக.. விழிகளை அகல விரித்தவரோ, “ஓ.. எஸ் எஸ்.. நான் தான் வரச்சொன்னேன்ல.. ஐ ஆம் கம்ப்ளீட்ளி பார்கொட்.. எனிஹவ்.. யூ ஆர் அ பிரேவ்மேன்!! ” என்றவராக.. ஈரெட்டில் வந்து.. ராகவனை சடாரென்று கட்டியணைக்கவும் செய்தார் அவர்.
எதிர்பாராத கட்டியணைத்தலில்.. அவன் அசௌகரியத்தை அனுபவித்தாலும்.. மனம் சுணங்காமல்.. வெளிக்கு இன்முகமாகவே ராகவன் நின்றிருக்க.. காதோரம் கேட்டது அவரது தழுதழுத்த குரல்!!
” என.. க்கிருக்கறது ஒரே பொண்ணு.. அம்மா இல்லாததால செல்லமா வேற வளர்த்துட்டேன்.. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆ.. கியிரிந்ததுன்னா.. நினைச்சுக்கூட பார்க்க முடியலை.. நன்றின்னு ஒற்றை வார்த்த போதாது.. ஆனா கட்டாயம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கு.. தேங்க்ஸ் மிஸ்டர். ராகவன்!!” என்ற பிரகாசம்.. ராகவனின் கையைப் பிடித்து தன்னிரு கைகளாலும் குலுக்கவும் செய்தார்.

அவனோ இனிய முறுவலுடன்,” ஐயோ.. எல்லையில நின்னு மக்கள காக்கறது மட்டும் தான் டுயூட்டியா.. எல்லைக்குள்ள வாழ்ற மக்கள காக்கறதும் என் ட்யூட்டி தான்.. அந்த வகையில் என் ட்யூட்டிய தான் பண்ணேன்!!” என்று பெருந்தன்மையாகச் சொன்னவனின் வார்த்தைகளும் பிடித்தது பிரகாசத்திற்கு.
அதற்குள் சமரச நிலைக்குத் திரும்பியவரோ,” ஸிட் ஸிட்..” என்று பழையபடி சோபாவில் அமருமாறு கைக்காட்டி அமரச் சொன்னவர்.. இரு ஆண்களும் அமர்ந்ததும்,” டீ?? காபி?? “என்று முகமன் விசாரித்தவராகக் கேட்டார்.
“தேங்க்ஸ் பார் ஆஸ்க்கிங்.. பட் சாப்ட்டு தான் வந்தோம்.. எங்களை அழைச்சுட்டு வரச் சொன்ன காரணம் சொன்னீங்கன்னா..? “என்று சுற்றி வளைத்து மூக்கைத் தொட நாடாமல்.. நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான் ராகவன்.
புன்னகையுடன்.. தன் கோர்ட்டினை நேர்ப்படுத்திக் கொண்டவரோ, “குட்.. குட் மை பாய்.. நேரத்தை வீணடிக்காம..ஸ்ட்ரெய்ட்டா பாய்ட்ன்க்கு வர்ற உன் பாலிசி பிடிச்சிருக்கு.. லிஸின்..!! “என்று கூர்மையான விழிகளுடனும்.. தீவிரமான குரலுடனும் மொழியலானார்.
“உன் ப்ரோபைல் பத்தி விசாரிச்சேன்.. குட்.. ஆல் குட்.. உன்னோட சின்சியாரிட்டி.. நேர்மை.. ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ ஹாவ் அ ஜாப் ஃபார் யூ.. சொல்லப் போனா.. ஒரு உண்மையா நடந்துக்கற ஆள் தேவை!! அதுக்கு நீ தான் கரெக்ட்டான ஆளுன்னு தோணுது” என்று அவர் அவனை உற்றுப் பார்த்தவராக கூற.. முதலில் என்னவென்று புரியவில்லை.
“அது எப்படி நீங்க முடிவு பண்ண முடியும்?? என்ன மாதிரியான வேலை? என்கிட்ட சொன்னீங்கன்னா.. நான் அந்த கரெக்ட்டான வேலைக்கு ஏத்த ஆளு தானா இல்லையான்னு சொல்வேன்” என்று அவர் முன் கூழைக்கும்பிடு போடாமல்.. ஆமாம் சாமி போடாமல்.. பூம்பூம் மாடு போல தலையாட்டாமல்.. சொன்னான் அவன்.
அவனது நெஞ்சுரம் சிவப்பிரகாசத்திற்கு அவன் மீதான நல்லெண்ணத்தை அதிகப்படுத்த.. பெரிதாக இடி இடியென நகைத்தார்.
” ஹஹஹா.. ஐ லைக் யுவர் கான்ஃபிடென்ட் மேன்!!” என்று அவனது விலாவுக்கு குத்தவும் செய்தார் அவர்.
அவனது தீவிர முகபாவம் கண்டபின்னர் தானும் முகபாவத்தை இறுக்கமாக மாற்றிக் கொள்ளவும் செய்தார் பிரகாசம்.
“மிஸ்டர். ராகவன் உங்களுக்கு போர்க்கலை தெரியும்.. கன்ன ஹேன்டில் பண்றதுல கூட பரிச்சயம் இருக்கு.. மோர்ஓவர்.. ஒரு தடவை என் டாட்டர் பூஜாவை கூட காப்பாத்தியிருக்கீங்க.. இதை விட வேறு என்ன தகுதி வேணும்?? அதனால என் டாட்டருக்கு பாடிகார்டா உங்களையே செலக்ட் பண்ணலாம்னு இருக்கேன்!! “என்று.. அவர் இறுக்கமான முகத்துடன் கேட்டார்.
என்ன! பாடிகார்ட்டா?? மெய்க்காப்பாளன்?? காவலன்??

அதுவும் பிரகாசத்தின் மகளுக்கா??
அவள் நாமம் பூஜா என்பதை.. பிரகாசம் சொல்லித் தான் அறிய வந்தவனுக்கு.. மெய்க்காப்பாளனாக பணிபுரியும் ஆர்வம் இலகுவில் எழவில்லை.
பிரகாசமோ.. அவனது அமைதியைக் கண்டவராக.. அவனைச் சம்மதிக்க வைக்க அவனிடம் ஆசை வார்த்தைகள் கூறி.. பேரம் பேசவே முயன்றார்.
“பட்டப்பகல்ல ஒருத்தன் என் டாட்டர் கழுத்துல கத்தி வைக்கறான்.. கூடி அத்தனை பேரும் வேடிக்கை பார்க்கறப்ப..களத்துல இறங்கி வீரமா சண்டை போட்டது நீங்க.. அதை தவிர வேறென்ன தகுதி வேணும்??” என்று அவன் வீரத்தைச் சிலாகித்து உரைத்தார் பிரகாசம்.
பின்பு.. தளர்ந்த வதனத்துடன்,” எனக்கும் பிஸினஸ்ல எதிரிகள் அதிகமாகிட்டே போறாங்க.. அடுத்த நிமிஷம்.. என் டாட்டருக்கோ.. எனக்கோ என்ன வேணா.. நடக்கலாம்.. என்னை விடவும்.. என் டாட்டருக்கு பாதுகாப்பு முக்கியம்.. குறைந்தது இரண்டு வருஷமாவது.. உன்னைப் போல ஒருத்தன் அவ பக்கத்துல பாதுகாப்புக்காக இருக்கணும்.. அதனால தான்.. உன்கிட்ட கேட்கறேன்!? “என்று சொல்ல தயங்கியவனாக இதழ் திறந்தான் அவன்.
” ஆனா.. நா.. “
” என் மகளை விட இந்த உலகத்துல எதுவும் எனக்கு முக்கியம் கிடையாது.. ஜஸ்ட் ரெண்டு வருஷம்.. அப்றம்.. அவ பாதுகாப்புக்கு பொருத்தமான ஒருத்தனை நியமிக்க வேண்டியது என் பொறுப்பு.. இல்லை.. ஐ கான்ட் டேக் நோ.. இந்த டீல்க்கு ஒத்துக்கிட்டீன்னா.. சென்னை ஈசிஆர்ல இருக்கற கெஸ்ட் ஹவுஸ் உனக்கு சொந்தம்.. கூடவே.. உன் பேர்ல பத்துகோடிரூபா பணம்.. பிக்ஸட் டெப்பாசிட் பண்ணிட்றேன்.. வேற என்ன கேட்டாலும் நான் பண்ண தயார் தான்.. பட் ஐ வான்ட் யுவர் எஸ்!!” என்று சொல்ல.. அப்போதும் ஒப்ப மனம் வரவில்லை ராகவனுக்கு.
ஆனால், அவன் நலம் கருதி சிந்தித்த கிஷோருக்குத் தான் இந்த ஒப்பந்தம்.. நல்ல ஒப்பந்தமாகத் தோன்றலானது.
” ஈசிஆரில் வீடு.. பத்துகோடி ரூபா பணம்..”
இதுவே சிறந்த வாய்ப்பாகவும் பட்டது.
அரசுக்காக இத்தனை காலம் ஓடாகத் தேயாத குறையாக வேலைப் பார்த்த போது கிட்டாத சன்மானத்தை.. பிரகாசம் என்னும் கோடீஸ்வரர் தருவதாகக் கூற.. இதனை நழுவ விட.. கிஷோரும் என்ன முட்டாளா??
நண்பனின் நலமான, வளமான வாழ்வுக்காக.. இதை அவன் ஏற்றேயாக வேண்டும் என்று தான் தோன்றியது.
நாயகன் வாய் திறந்தால் நிச்சயம் மறுக்கக்கூடும் என்பது திண்ணமாகப் புரிந்தது கிஷோருக்கு.
ஆகையால், தலைவன் இதழ் திறந்து மறுத்துரைக்க முன்னம் வாய் திறந்திருந்தான் காவல்துறை நண்பனும்.
“சார்.. அதையெதுக்கு அவன்கிட்ட கேட்டுக்கிட்டு.. நான் சம்மதம் சொன்னா.. அவனுக்கும் ஆல் ஓகே தான் சார்.. நீங்க எப்ப ஜாய்ன் பண்ணனும்னு சொன்னீங்கன்.. னா” என்று இழுக்கவும் செய்தான்.
அப்போதும் இடையிட்டு ஏதோ பேச வந்த தலைவனை.. பிறர் அறியாமல் கண்ணாலேயே.. ‘ பேச வேண்டாம்’ என்பது போல அடக்கினான் தோழன்.
தான் வழங்கிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாகவே கொண்ட பிரகாசமும் மனமகிழ்ந்து போனார்.
வாயெல்லாம் பல்லாக சிரித்தவாறே அவரும்.. “ஓ.. கிரேட்.. இப்பவே இந்த நிமிஷம் கூட.. ஜாய்ன் பண்ணிக்கலாம்!!” என்றவர் இளம் வாலிபனையும், தன் மகளையும் அருகில் வைக்கவும் உள்ளூற பயந்து தான் இருந்தார். அது அவரின் பேச்சில் நின்றும் உள்ளங்கை நெல்லிக்கனி போல புலப்படவும் செய்தது.
பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில் பக்கத்தில் வைக்க நாடியவர்.. தந்தையாக ஒரு வரன்முறையையும் நியமிக்கவே செய்தார்.
“பட்.. பாடிகார்ட்.. பாடிகார்ட்ன்ற எல்லையில நிக்கணும்..என் பொண்ண தப்பான கண்ணோட்டத்துல பார்த்தா கூட.. விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்!” என்று எச்சரிக்க.. அவரது கூற்றும், தொனியும் பிடிக்காமல் போனது, தலைவனுக்கு.
புதல்வி உயிர்க்கு பாதுகாப்பு வழங்குமாறு கிட்டத்தட்ட யாசகம் யாசித்து நிற்பவர்.. தன்னையும் சரி, தான் ஈன்றெடுத்த மகளையும் சரி.. நம்பாமல் பேசுவது போல் தோன்ற.. சுருசுருவென கோபம் வலுத்தது அவனுக்கு.
இவனது மனவோட்டங்களை அறியாது பிரகாசமும்.. தன் ஏகப் புதல்வியை நோக்கிக் குரல் கொடுக்கலானார், உள்ளே!!
“இருங்க.. ஐ வில் கால் மை டாட்டர்!! “என்றவர் கூடத்தில் நின்றும்,” பூஜாஆஆ.. பூஜாஆஆஆ!! “என்றழைக்க.. மாடிப்படி விட்டும் புள்ளிமானாகத் துள்ளி வந்தாள் பூஜா.
செல்வச் சீமாட்டி போல இல்லாமல்.. எந்தவிதமான பகட்டு அலங்காரங்களும் இல்லாமல், முற்றிலும் இயல்பான கோலத்துடன்.. தொளதொள ஷல்வாரில்.. மென்மையாக நடந்து வரலானாள் பூஜா.
” என்ன டாடி?? ” என்று கேட்டவளாக, தந்தை அமர்ந்திருந்த ஒற்றைச் சோபாவின் கைவைக்கும் விளிம்பில்.. தன் ஒரு பாதி பிருட்டம் வைத்து அமர்ந்து கொண்டாள் அவள்.
தனக்கெதிரே.. தன்னை இன்று காத்த ஆபத்பாந்தவனும், அவனது தோழனும் அமர்ந்திருப்பதையும் கூட கவனியாத பூஜாவின் விழிகளோ முற்றிலும் பதிந்திருந்தது தன் தந்தையில்.
பிரகாசமோ.. எதிரே அமர்ந்திருந்த நாயகனைக் கைகாட்டி, ” மீட் மிஸ்டர். ராகவன்.. உன்னோட புது பாடிகார்ட்!!” என்று அறிமுகப்படுத்த.. செந்தாமரையாய் விகசித்திருந்த கன்னிகையின் முகம் சிறுகச் சிறுக வெண்டாமரையாகக் கூம்பிப் போனது.
‘இவனா?’என்பது போல இவளது நயனங்கள் அதிர்ந்து விரிய.. ராகவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
“அப்பா பாடிகார்ட்டா எதுக்கு?? எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கலை!! “என்று தன் நிராகரிப்பை தைரியமாக வெளியிட்டவளாக ராகவனை ஏறிட்டவள்.. எண்ணெயில் இட்ட கடுகு போல இன்னும் இன்னும் வெடிக்கலானாள்.
இவனா மெய்க்காவலன்?? சங்கை அறுத்துக்க என்றவனாயிற்றே? காந்தியது இதயம்!!

அப்படி அவன்.. கயவனிடம், ‘அறுத்துக்க’ என்று தைரியமாகச் சொன்னது கூட.. கயவனை மதியிழக்கச் செய்யும் ஒரு வகையான மதிநுட்பம் என்பது புரியவில்லை பேதைக்கு.
அவனும் தன் மறுப்பை வெளியிட முன்வந்தவன் தான்!!
ஆயினும், அடங்காப் பிடாரி போன்ற முரட்டுப் பெண்ணவளின்.. தன் மீதான பிடித்தமின்மையைக் கண்டு புருவம் உயர்த்தியவனுக்கு.. அவளது மெய்க்காவலனாக இருக்க.. எண்ணம் வந்தது.
‘என்னையா வேண்டாம் என்கின்றாய்?’ அவனிடம் ஈகோ கிளறிவிடப்பட.. அப் பணியை ஏற்றுக் கொள்ள வைராக்கியமும் பிறந்தது.
மயிலைப் பசுவை அடக்குமா காங்கேயம் காளை??

(இதோ இதோ நீங்கள் போனக்கதைக்கு கொடுத்த பேராதரவு கண்டு ♥️😘💋💞அதிக நாட்கள் லீவ் எடுக்காமல் புதுக்கதையுடன் ஓடி வந்துட்டேன். ❤️💗💞💋முதல் யூடி ஹவ்??🙈🙈 கண்டிப்பா டெல்லுங்கோ..✍️✍️ அப்ப தான் டக்டக்குன்னு அடுத்த யூடி வரும். 🤞🤞வீர ராகவன் (விஜய்) அன்ட் பூஜா ஜோடி பிடிச்சிருக்கா??💟💕💘💝💖 கமென்ட் பண்ணுங்க. லவ் யூ ஆல் லேடீஸ்💗💓💞💕💜💚🤎💛)